பாம்பன் சுவாமிகள் சக்தி வாய்ந்த பாடல் போற்றி விண்ணப்பம் pic.twitter.com/mTikbSX0wl
— Selvaraj Venkatesan (@niftytelevision) January 5, 2025
பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய போற்றி விண்ணப்பம்
ஐயனே அரசே போற்றி அருமறைப் பொருளே போற்றி
துய்யனே துணையே போற்றி தூமணித் திரளே போற்றி
மெய் அருள் விளைவே போற்றி வெற்றிவேல் ஏந்து பூவன்
கையனே போற்றி எங்கள் கடவுளே போற்றி போற்றி 1
போற்று விண்ணவர்கோன் போற்றி புரிதவத் தொண்டர்க்கு இன்பம்
ஆற்றுநல் அழகன் போற்றி ஆடும் அம்பரியோன் போற்றி
நீற்றினைப் புனைந்தமேனி நிலவு அருட்குன்றம் போற்றி
சீற்றம் எம் மேற்கொளா ஓர் சிவசுப்பிரமணியம் போற்றி 2
மணி அணி மால்விரிஞ்சன் மற்று உள கணங்கள் யாவும்
பணிய நின்றவனே போற்றி பரமனே போற்றி அன்பர்
அணி அடி அலரே போற்றி ஆக்கி நன்கு அளித்து மாய்க்கும்
குணம் உடை அத்தா போற்றி குமரவேள் போற்றி போற்றி. 3
போற்றி வந்து ஆளும் உன்றன் பொன் அடிக் கமலம் போற்றி
தேற்றுவார் உன்னை அல்லால் திக்கு வேறு இல்லை போற்றி
மாற்று அரும் பிறவிக் காட்டை மடிக்க மெய்ஞ்ஞானத் தீயை
ஏற்றும் எஃகு உடையாய் போற்றி எங்குறை தவிர்ப்பாய் போற்றி. 4
பாய்நதிக் கிடையோன் வாமபாகமே கொண்டான் தன்னைத்
தாய் என உவந்தாய் போற்றி தனிப் பரஞ் சுடரே போற்றி
வீ இலாப் புத்தேள் மாதை வேட்டு மற்று ஒருத்திக்கு அன்று
நாயகன் ஆனாய் போற்றி நான்மறை முதல்வா போற்றி. 5
முதலுமாய் நாப்பண் ஆகி முடிவுமாய் நின்றாய் போற்றி
சததள பாதா போற்றி சகச்சிர நாமா போற்றி
மதிபுனை பரமனார்க்கு மதலையாய்க் குருவாய்த் தேவர்
பதி என உளவேல் போற்றி பரஞ்சுடர்க் கண்ணா போற்றி. 6
கண்ணுமாய்க் கருத்தும் ஆகிக் காண் எழில் எந்தை போற்றி
விண்ணுமாய் மண்ணும் ஆகி விளங்கு அருள் தேவே போற்றி
பண்ணவர்க்கு அருளத் தண்ட பாணியா நின்றாய் போற்றி
தண் அருள் கடலே போற்றி சதுர் முகற்கு இறைவா போற்றி 7
இறைவனே போற்றி ஆதி எந்தையே போற்றி வேலுக்கு
இறைவனே போற்றி நீப இணர் அணி சிவனே போற்றி
மறைபுகல் அறிய எங்கண் மாதவ மணியே போற்றி
குறைவு அறு நிறைவே போற்றி குளிர்சிவக் கொழுந்தே போற்றி 8
கொழுமையில் குளிர்மை போற்றி குக்குடக் கொடியாய் போற்றி
குழுமிய சிவகணங்கள் கும்பிடும் கழலாய் போற்றி
தொழுபவர்க்கு அருள்வோய் போற்றி சுந்தர போற்றி என்னை
முழுதும் ஆள்பவனே போற்றி மோனநாயகனே போற்றி 9
நாயகம் ஆனார்க்கு எல்லாம் நாயகம் ஆனாய் போற்றி
தாய் என வருவாய் போற்றி சண்முகத்து அரசே போற்றி
தீ அரிப் பெயரோர்க்கு அன்று தெய்வமும் குருவும் ஆன
நீ எனைக் கலந்து ஆள் போற்றி நித்தனே போற்றி போற்றி 10
— Selvaraj Venkatesan (@niftytelevision) January 5, 2025
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.