Sunday, September 24, 2023

குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்


சென்னையின் புறநகர் பகுதியான காஞ்சிபுரம் மாவட்டத்தின் குன்றத்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் இரண்டாம் குலோத்துங்க மன்னரால் கட்டப்பட்டது. இதிகாசத் தகவல்களின்படி முருகப் பெருமான் திருப்போரூரில் இருந்து திருத்தணிக்குப் பயணம் மேற்கொள்ளும்போது இத்தலத்தில் தங்கினார் என்று அறியப்படுகிறது. 


குன்றுடன் கூடிய ஊர் என்பதால், இத்தலத்துக்கு குன்றத்தூர் என்ற பெயர் ஏற்பட்டது. 84 படிகள் கொண்ட மலைக்கோயிலில் மூலவர் வடக்கு திசையை நோக்கி இருப்பது தனிச்சிறப்பு. சிவாகம முறையில் பூஜைகள் நடைபெறும் இக்கோயிலைப் போற்றி முருகனடியார் பலர் பாடியுள்ளனர். இங்குள்ள சரவணப் பொய்கை மிகவும் சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது.


தல வரலாறு

திருப்போரூரில் அசுரர்களுடன் போரிட்டு வெற்றி பெற்ற முருகப் பெருமான், உக்கிரமாக இருந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து சாந்தமாகி திருத்தணிக்குச் சென்றார். செல்லும் வழியில் ஓரிடத்தில் சிவபூஜை செய்ய எண்ணினார். அந்த இடத்தில் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அபிஷேக ஆராதனைகள் செய்தார். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தார். அந்தக் குன்றில் சிறிது நேரம் அமர்ந்து சிவபெருமானை வேண்டி, தியானம் செய்தார்.

பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சிபுரிந்த குலோத்துங்க சோழன், இக்குன்றின் மீது முருகப் பெருமானுக்கு கோயில் எழுப்பினார். முருகப் பெருமானால் பூஜிக்கப்பட்ட சிவபெருமான், மலையடிவாரத்தில் ‘கந்தழீஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் தனி கோயில் மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கந்தப் பெருமானால் வழிபடப்பட்டவர் என்பதால் சிவபெருமானுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

மூன்று நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள ராஜ கோபுரம், திருக்கல்யாண மண்டபம், மகா மண்டபம், அர்த்த மண்டபம் என்று கோயிலின் அமைப்பு உள்ளது. இங்குள்ள வில்வ மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகரை வழிபட்டால் சகல கலைகளிலும் தேர்ச்சி பெறலாம் என்பது நம்பிக்கை. கோயில் அமைந்துள்ள மண்டபத்தின் ஓரத்தில் உள்ள அரச மரத்தடியில் நாகலிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

திருப்பரங்குன்றத்தில் தெய்வானையுடன் மட்டுமே வடதிசை நோக்கி அருள்பாலிக்கும் முருகப் பெருமான், இத்தலத்தில் வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து வடதிசை நோக்கி அருள்பாலிக்கிறார். இதனால் இத்தலம் தென் தணிகை என்றும் அழைக்கப்படுகிறது.

84 படிகள் கொண்ட குன்றின் மீது அமைந்த கோவில் இது. இக்கோவிலில் முருகன் சன்னதிக்கு நேரே நின்று பார்த்தால், முருகன் மட்டுமே தெரிவார். வள்ளி, தெய்வானையைக் காண முடியாது. சன்னதிக்கு இடப்புறம் அல்லது வலப்புறம் நின்று முருகனை பார்த்தால், வள்ளி அல்லது தெய்வானை ஆகிய இருவரில் ஒருவருடன் சேர்ந்திருக்கும்படிதான் தரிசிக்க முடியும் வகையில் சன்னதி அமைக்கப்பட்டிருக்கிறது

திருவிழா

முருகன் சன்னதி கோஷ்டத்தில் தெட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்கை இருக்கின்றனர். பிரகாரத்தில் காசிவிஸ்வநாதர், விசாலாட்சி, விநாயகர், பைரவர், நவக்கிரகம், நாகர் சன்னதிகள் உள்ளது. இங்குள்ள விமானம் ஷட்கோண அமைப்பில் உள்ளது.

கந்தசஷ்டி விழா இங்கு எட்டு நாட்கள் நடக்கிறது. ஆறாம் நாளில் சூரசம்ஹாரம், ஏழாம் நாள் வள்ளி திருமணம், எட்டாம் நாளில் தெய்வானை திருமணம் நடக்கிறது. பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் இவ்வூரில் அவதரித்தவர். இவருக்கு மலையடிவாரத்தில் தனிக்கோவில் இருக்கிறது.

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக் கொள்கிறார்கள். முருகனுக்கு திருக்கல்யாணம் செய்து வைத்தும், வஸ்திரம் அணிவித்து, அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.


Follow the Thaipoosam.in channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaAGiR8GJP8CC9KqZa25



No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

முருகனின் ஆறெழுத்து மந்திரப் பிரயோகம்

  சகல ஜன வசீகரமாம் சஹாரத்தாலே  தனமுதல் அழைத்து வரும் ரஹாரத்தாலே  பகைபிணி நோய் தீர்த்து வைக்கும் ஹகாரத்தாலே  பகைத்தவரைக் கொல்ல வைக்கும் ணகாரத...