முருகன் வழிபாடு தமிழ்ச்சமூகத்தின் தொன்மையானவழிபாடு. சங்க இலக்கியத்திலேயெ முருகன் வழிபாடு பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. தொன்றுதொட்டு பூசத் திருநாளில் முருகப்பெருமானை வழிபடும் வழக்கம் இருந்து வந்துள்ளது. பூச நாளில் 'வேலன் வெறியாட்டு' என்ற முருக வழிபாடு, ஆண், பெண் என்ற இருபாலரும் வேல் பிடித்து ஆடிய செய்திகளை சங்கத் தமிழ் தகவல்கள் கூறுகின்றன. அத்தகைய பழந்தமிழ்த் திருவிழாவான தைப்பூசத்தின் மகத்துவங்கள் குறித்த இங்கு தியானிப்போம்.
தைப்பூசம் மிகவும் சுபிட்சமான நாள் என்பது நம்பிக்கை. எனவே அன்று தொடங்கும் நல்ல காரியங்கள் எதுவானாலும் சிறந்த பலனைக் கொடுக்கும் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கை.
பூச நன்னாளில் கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே உபவாசம் இருந்து முருகப்பெருமானை வழிபடலாம். முருகனின் புகழ் பாடும் பாடல்களை அன்று முழுவதும் பாடுவது சிறந்த பலன்களை அளிக்கும்.
தைப்பூச நன்னாளில் வேல் வழிபாடு செய்வது மிகுந்த நன்மைகளை அளிக்கும் என்பார்கள். வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் பூச நாளில் மகா ருத்ர அபிஷேகம் செய்வது சிறந்தது.
தைப்பூச நன்னாளில் திருப்புகழ் மகா மந்திர பூஜை செய்வதும், கலந்து கொள்வதும் மன விருப்பங்களை நிறைவேற்ற உதவும் மகா மருந்துகள் ஆகும் என்பது ஆன்றோர் வாக்கு.
இந்தியா மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரிசியஸ், சுமத்திரா போன்ற தென் கிழக்கு ஆசியப் பகுதிகள், ஆஸ்திரேலியா, பிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் முக்கிய விழா இந்த தைப்பூசம்.
இரணியவர்மன் என்ற மன்னன் தில்லையம்பதியில் பல்வேறு திருத்தொண்டுகள் செய்து ஒரு தைப்பூச நாளில்தான் ஈசனை நேருக்கு நேர் சந்தித்துப் பெரும்பேறு கொண்டான் என்கிறது தில்லை புராணம்.
புகழ் பெற்ற காவடிச் சிந்து பாடல்கள், நடைபயணமாக பழநிக்குக் காவடி சுமந்து வந்த பக்தர்களால் பாடப்பட்டுப் பிரபலமானது என்பர்.
சோழர்கள் காலத்தில் தைப்பூச விழா, கூத்துகள் நடைபெற்ற ஒரு கேளிக்கை விழாவாக இருந்துள்ளது. இதை திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் கல்வெட்டுகள் கூறுகின்றன.
முருகப்பெருமானுக்கு 16 விதமான காவடிகள் எடுப்பது இந்நாளைய விசேஷம். பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, சர்க்கரை காவடி, தீர்த்தக் காவடி, பறவைக் காவடி, மச்சக்காவடி, மயில் காவடி என ஒவ்வொரு காவடிக்கும் தனித்தனியே பலன்கள் உண்டு என்பர்.
முருகப்பெருமான் வள்ளியை மணந்ததால் தெய்வயானை அம்மை ஊடல் கொள்ள, அதை முருகப்பெருமான் தீர்த்த நன்னாள் இது என்பதால், திருவூடல் விழா இந்நாளில் முருகப்பெருமான் ஆலயங்களில் நடைபெறும்.
முருகப்பெருமானுக்கு உகந்த நாளான தைப் பூச திருநாளில் முருகன் குடியிருக்கும் கோயில்களுக்குப் பாதயாத்திரை செல்வதும், காவடி சுமப்பது, வேல்குத்துதல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களையும் செய்வது பக்தர்களின் வழக்கம். இந்நாளில் வேண்டி வழிபடும் அன்பர்கள் கல்வி, செல்வம், ஞானம் மூன்றிலும் சிறந்து விளங்குவர் என்பது ஐதிகம்.
திருஞான ஞானசம்பந்தர் அங்கம் பூம்பாவையைத் திருப்பதிகம் பாடி உயிரோடு எழுப்பிய அற்புதம் நடைபெற்றது தைப்பூச நன்னாளில்தான்.
பூச நாளில் புனித நீராடி ஈசனைப் பணிவது தென்னக மக்களின் வழக்கம் என்பதை 'பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே' என்று பெருமையோடு கூறுகிறார் திருநாவுக்கரச பெருமான். திருவிடைமருதூரில் தைப்பூச நாளில் புனித நீராடுவதன் பெருமையை சம்பந்தரும் பாடியுள்ளார்.
பூச நட்சத்திரம் குரு பகவானுக்கு உரியது என்பர். ஆலமர் செல்வனாம் தென்முகக் கடவுள் ஈசனுக்கே குருவாக அருளியவன் முருகப்பெருமான். எனவே இந்நாளில் முருகனை வழிபடுவது குருவின் அருளைப் பெற்றுத்தரும்.
தைப்பூச நட்சத்திரத்தன்றுதான் முருகப் பெருமான் வள்ளிப் பெருமாட்டியை மணந்து கொண்டார் என்றும் சில புராணங்கள் கூறுகின்றன.
படைப்பில் நீரும், நீரிலிருந்து முதல் உயிரினமும் தோன்றிய நாள் தை மாத பூச நாளில்தான் என்கின்றன புனித நூல்கள். அதனாலேயே இந்நாளில் ஆலயம்தோறும் தெப்போற்சவம் நடைபெறுகின்றன.
வேல் வேறு, வேலவன் வேறு அல்ல. பிரம்ம வித்யா என்று போற்றப்படும் ஞான வேலை குமரன் சக்தியிடம் பெற்ற நாள் இந்நாள்.
Follow the Thaipoosam.in channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaAGiR8GJP8CC9KqZa25
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.